ஆப்கானிஸ்தானில் தற்காலிக பிரதமராக ஹஸ்ஸன் அகுந்த் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானின் தற்காலிக பிரதமராக முல்லா ஹஸ்ஸன் அகுந்த் என்பவரை தாலிபன் தலைமை அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றவர் ஹஸ்ஸன் அகுந்த். ஆப்கானிஸ்தானின் கந்தஹார் பகுதியைச் சேர்ந்த இவர், தற்போது தாலிபன் அமைப்பின் சக்திவாய்ந்த ரெஹ்பாரி ஷூரா குழுவின் தலைவராக இருக்கிறார். இந்த குழுதான் மிக முக்கியமான விவகாரங்களில் முடிவை எடுக்கும் அதிகாரம் கொண்டது. தாலிபனை நிறுவியர்களில் ஒருவர் இந்த ஹஸ்ஸன் அகுந்த். போராளிகள் குழு தலைவர் என்பதை விட இவர் மத தலைவராகவே தாலிபன்களால் போற்றப்படுகிறார்.
தலைநகர் காபூலில் புதிய தற்காலிக அரசில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்ற தகவலை தாலிபன் செய்தித்தொடர்பாளர் சஃபியுல்லா முஜாஹித் இன்று இரவு செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். அப்போது அவர், முறைப்படி புதிய அரசு அமையும்வரை இடைக்கால அரசில் இடம்பெறுவோரை தாலிபன் தலைமை அறிவித்துள்ளது என்று கூறினார். இதன்படி இடைக்கால பிரதமராக முல்லா ஹஸ்ஸன் அகுந்த், துணைப் பிரதமராக முல்லா கனி பராதா், உள்துறை அமைச்சராக சிராஜுதின் ஹக்கானி, பாதுகாப்பு அமைச்சராக முல்லா யாகூப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தாலிபன் செய்தித்தொடர்பாளர் கூறினார். இதில் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சிராஜுதின் ஹக்கானி, தாலிபன் போராளிகள் ஆயுதக்குழுவில் கடுமையான பயிற்சி பெற்ற ஹக்கானி குழுவின் தலைவராக உள்ளார். நன்றி பி.பி.சி.தமிழ்