அற்புதம் நிகழ்த்தும் ஸ்டாலின் ஆட்சி – காதர் முகைதீன் பெருமிதம்
இராமநாதபுரம், ஜுன்,18-
தமிழகத்தில் கலைஞர் ஆட்சியை விட ஸ்டாலின் ஆட்சி மிகச் சிறந்த ஆட்சி அற்புதம் நிகழ்த்தும் ஆட்சி என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் தெரிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் முன்னாள் எம்பி காதர் முகைதீன் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் மதுபான கடையை திறக்கக் கூடாது என்பது எங்கள் நிரந்தர கொள்கை.
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவில் தவறு செய்யும் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு அவர்களை நீக்கிவிட்டு ஜனநாயக முறைப்படி பாகுபாடின்றி இஸ்லாமியர்களை குடியுரிமையில் இணைக்க வேண்டும்.
மேலும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் உள்ளது. இரு நாடுகளும் கலந்து பேசி இதற்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும். தமிழகத்தில் தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்று காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓய்வின்றி கொரோனா ஒழிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கலைஞரின் ஆட்சியை விட ஸ்டாலின் ஆட்சி அற்புதம் நிகழ்த்தும் ஆட்சியாக உள்ளது.இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறையுடன் செயல்படும் அவர் ஊரடங்கின் போது சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவித்த அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களை தனி விமானம் ஏற்பாடு செய்து மீட்டு அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.
அதனை பாராட்டி உலக அமைப்புகள் சார்பில் அவருக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது வழங்கி கௌரவித்தது எங்கள் கட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொருளாளர் ஷாஜகான், மாவட்ட தலைவர் வருசை முகமது, மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட துணை செயலாளர் முகமது யாக்கூப், இராமநாதபுரம் நகர் செயலாளர் கதியத்துல்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஷாகுல்ஹமித்