அனைத்து அரசு துறைகளிலும் யோகா ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் – தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை
இராமநாதபுரம்,ஆக,4,
தமிழக அரசு கல்வித்துறை மற்றும் அரசு துறைகளில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கம் சார்பில் அதன் மாநில பொதுச்செயலாளர் வே.காசிநாததுரை கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்க கூட்டம் இராமநாதபுரத்தில் நடந்தது. அப்போது அதன் மாநில பொதுச்செயலாளர் காசிநாததுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாட்டில் யோகா கல்வி பயின்றவர்களை அரசு பள்ளிகளிலும் , அரசுத்துறைகளிலும் யோகா பயிற்றுனராகவும், யோகா ஆசிரியர்களாகவும் நியமனம் செய்யப்படும் என கூறி எதுவும் செய்யாமல் கடந்த ஆட்சியில் ஏமாற்றி விட்டனர். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சி அமைந்ததும் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தேர்தலுக்கு முன்பு உறுதி அளித்திருந்தார். அதனடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் யோகா கல்வி பயின்றவர்களை வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகவோ அல்லது தேர்வின் மூலமாகவோ யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பிற துறைகளிலும் யோகா பயிற்றுனர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வரை சந்திக்க உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் டாக்டர் ஷாஜகான், மாரிமுத்து, இராமலெட்சுமி, சர்மா, சுகன்யா, அமுதா, சத்தியபாமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எம்.சோமசுந்தரம்.