தமிழக ஆயுள் கைதிகள் 700 பேர விடுதலை – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பூரண முடிவு நல்லது நடக்குமென நாடு எதிர்பார்க்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் வேண்டுகோள்
திருச்சி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் 22.11.2021 திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழக முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், 13-19-2021 அன்று, தமிழகச் சட்டப் பேரவையில் கீழ்வரும் அரியதோர் அறிவிப்பை வெளியிட்டார்கள். “சிறைக் கைதிகளின் முன்விடுதலை தொடர்பான சட்டம் மற்றும் விதிகளுக்குட் பட்டு, பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களுடைய 113வது பிறந்த நாள் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதியன்று வருகிறது. அப்போது, நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்துவரும் 700 ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து, முன்விடுதலை செய்ய இந்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்”
முதலமைச்சர் அவர்களின் இந்த அறிவிப்பு, பலகாலமாகச் சிறையில் வாடுவோர் மத்தியிலும், அவர்களின் குடும்பத் தாரிடையிலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடிய பெரும் வரவேற்பைப் பெற்றது. அறிவிப்பைச் செயல்படுத்துவதற்கு ஆயுள் காலச் சிறைக்கைதிகள் பற்றிய விவரங்களைச் சேகரித்து அரசுக்கு அனுப்புவதற்குக் குழுக்கள் நியமிக்கப் பட்டிருக்கின்றன. இந்தக் குழுவினர் சமர்ப்பிக்கும் அறிக்கையைப் பரிசீலித்து, அவர்களில் 700 பேர் பட்டியலை வெளியிட்டு, அவர்களை முன்விடுதலை செய்யும் நடவடிக்கையை தமிழக முதல்வர் அவர்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள். ஆயுள் காலச் சிறை வாசிகள் பற்றிய விவரங்களைச் சேகரிப்பதற்கு நியமிக்கப் பட்டுள்ள குழுவினர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் பற்றிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணையில் 52 விதமான குற்றங்களும் அவற்றில் தண்டிக்கப் பட்டுள்ளவர்களும் முன் விடுதலைக்கு தகுதியானவர்களாக கருதப்பட மாட்டார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.
இது, சிறைக்கைதிகளின் விவரங்களைச் சேகரிக்கும் குழுவினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் மட்டுமே. பரிசீலிக்கும் குழுவினர் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வழிகாட்டு தல்களைச் சரிவர ஆய்வு செய்து, ஒவ்வொரு கைதியின் நிலைமை பற்றியும் தனித்தனியான அறிக்கையை அரசுக்குச் சமர்பிக்க வேண்டும் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. முன்விடுதலை பற்றிய முடிவெடுக்கும் அதிகாரம் இந்தக் குழுவினருக்கு இல்லை. இந்தக் குழுவினர் சமர்ப்பிக்கும் ஆய்வறிக்கையை நடைமுறைப் படுத்தும் அதிகாரம் தமிழக அரசுடையது. இன்னும் சொன்னால், தமிழக முதலமைச்சர் அவர்களின் ஏகபோக தனி அதிகாரம் மூலமாகவே 700 பேருடைய முன்விடுதலை முடிவு அறிவிக்கப்படக் கூடியதாக இருக்கிறது.
அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் பொருந்தி இருந்தாலும் கைதிகள் விடுவிக்கப்படுவர் எனக் கருதிவிடக்கூடாது. பரிந்துரைக் குழுவினரின் அறிக்கையை ஏற்பதும் ஏற்காததும் அரசின் அதிகாரத்திற்கும் அதன் ஏகபோக முடிவுக்கும் கட்டுப்பட்டதாகும். பரிந்துரைக் குழுக்க ளின் அறிக்கையை மேலும் திருத்தவோ மற்ற அம்சங்களைக் கருத்தில் கொள்ளவோ, தண்டனையில் இயல்பு மற்றும் அந்தத் தண்டனை பெற்றவர்களை விடு விப்பதின் மூலம் சமுதாயத் தில் ஏற்படும் விளைவுகள் மற்றும் விடுவிக்கப் படுபவர்களின் புனர்வாழ்வு பற்றியும் பொதுநலன் குறித்தும் முடிவு செய்யும் பூரண அதிகாரம் தமிழக அரசிடம் இருக்கிறது; குறிப்பாக, தமிழக முதலமைச்சர் அவர்களின் ஏகபோ அதிகார முடிவுக்குரியதாக இருக்கிறது என்பதையும் மேலே குறிப்பிட அரசாணை தெளிவுப்படுத்தி இருக்கிறது. It is the sole discretion and prerogative of the Government taking into account the other factors like the nature of offence and its effect on society, fitness for rehabilitation into society and public interest etc.,
தமிழக அரசாணையில் இடம்பெற்றுள்ள இந்த வாசகம் மிகவும் முக்கியமானது மட்டுமல்ல; நல்லது நடப்பதற்குக் கட்டியம் கூறுவதும் ஆகும். பேரறிஞர் அறிஞர் அண்ணா பிறந்த நாளை ஒட்டிய முன்விடுதலை பெற உள்ளவர்களில் எல்லாச் சமுதாயத்தவரும் இருப்பர் என்பதிலோ, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தங்களுக்குரிய தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி 700 பேர்களுடைய குடும்பங்களிலும் ஒளி விளக்கு ஏற்றி வைப்பார் என்பதிலோ யாரும் ஐயப்பட தேவையில்லை. நாளைக்கு நடக்கவுள்ள நல்லதுக்கு நாம் வாழ்த்துச் சொல்வோம். இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேற்கண்ட செய்தியை தங்களது ஊடகத்தில் வெளியிட்டு உதவுமாறு வேண்டுகிறோம்.